Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

கரோனாவால் உயிரிழந்த ஆண்டாள் பாட்டியை பராமரித்த கிறிஸ்தவ இல்லம்; தகனம் செய்த இஸ்லாமியர்கள்: மதங்களைக் கடந்து நிற்கும் மனிதநேயம்

ஈரோடு

ஈரோடு திண்டலில் ‘லிட்டில்சிஸ்டர்ஸ்’ எனும் முதியோர் இல்லம் கிறிஸ்தவ அமைப்பினரால் நடத்தப்படுகிறது. 50 முதியவர்கள் தங்கியுள்ள இங்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், ஆண்டாள்(75)எனும் மூதாட்டி, இல்லத்திலேயேதனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரின்உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26-ம் தேதி உயிரிழந்தார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இல்லத்தில் சமையல் பணியில் இருந்த ஆண்கள் தங்களது ஊர்களுக்குச் சென்று விட்ட நிலையில், ஆண்டாளின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் முதியோர் இல்ல நிர்வாகிகள் தவித்துள்ளனர். அப்போது முதியோருக்கு உணவு வழங்குவதற்காகச் சென்ற ‘உணர்வுகள்’ அமைப்பின் தலைவர் மக்கள்ராஜனிடம் இதைத் தெரிவித்துள்ளனர். இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்டாளுக்கு, இந்து முறைப்படி சடங்குகள் செய்து எரியூட்ட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாநகராட்சி மின் மயானத்தில் உடலை எரியூட்ட அனுமதி பெறப்பட்டது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களைப் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்து வரும் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் உதவியுடன் ஆண்டாளின் உடல் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இந்து மத முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ‘உணர்வுகள்’ அமைப்பின் தலைவர் மக்கள் ராஜன் கூறியதாவது: கிறிஸ்தவ அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கிய முதியோர் இல்லம் என்றாலும், கரோனாவால் உயிரிழந்த ஆண்டாள் பாட்டிக்கு, இந்து முறைப்படி சடங்குகள் செய்ய வேண்டுமென அவர்கள் விரும்பினர். அதன்படியே மின் மயானத்தில் இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. அவர்களை அடக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் தோழர்கள் உதவினர். இந்நிகழ்வில் மதங்களைக் கடந்து மனிதநேயம் முன்நின்றுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x