Published : 24 Dec 2015 11:09 AM
Last Updated : 24 Dec 2015 11:09 AM

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் 67,363 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: தேர்வு பயத்தை போக்க நடவடிக்கை

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பயத்தைப் போக்கும் வகையில் ஒரே வாரத்தில் 67,363 பேருக்கு உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை பாதிப்பு காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டன.

நீண்ட நாள் விடுமுறை முடிந்து கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. வெள்ள பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கும் வகையில் உளவியல் ஆலோசனை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள் அடங்கிய 10 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கவும் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கவும் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் நடமாடும் குழுக்கள் மூலம் 213 பள்ளிகளைச் சேர்ந்த 67,363 பேருக்கு உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 38,036 பேர் மாணவிகள். இந்தக் குழுவினர் தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x