Published : 29 May 2021 03:12 AM
Last Updated : 29 May 2021 03:12 AM

பள்ளி ஆசிரியரை தொடர்ந்து தட கள பயிற்சியாளர் மீது போக்சோவில் வழக்கு: தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி

சென்னையில் அடுத்தடுத்து 2 பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மாணவிகள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த சம்பவங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில், சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு நேற்று காலை வந்த, 19 வயது பெண் ஒருவர் தட களப் பயிற்சியாளரான நந்தனம் நாகராஜன்(59) (இவர் ஜிஎஸ்டி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர்) மீது புகார் அளித்தார்.

அதில், "2013 முதல் 2020 வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பயிற்சியாளர் நாகராஜனிடம் தட களப் பயிற்சி பெற்றேன். இந்நிலையில், நாகராஜன் சில நாட்கள் சக பயிற்சியாளர்களை அனுப்பிவிட்டு, பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி என்னை மட்டும் வளாகத்தில் உள்ள அறையில் அமரவைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதேபோல, மேலும் சில பெண்களிடமும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

நான் ஒத்துழைக்காததால், எனது தட களப் பயிற்சியை நிறுத்தினார். மேலும், பிரச்சினை செய்தால், என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகவும், என்னைப் பற்றி தவறான தகவலைப் பரப்பி, எந்த போட்டியிலும் கலந்துகொள்ள விடமாட்டேன் எனவும் மிரட்டினார். இதனால் மன உளைச்சலுடன், எனக்கு நடந்ததை யாரிடமும் கூறாமல் இருந்தேன்.

பயிற்சியாளர் நாகராஜன் என்னைப் பற்றி அனைவரிடமும் அவதூறாக கூறிய நிலையில், எனது பெற்றோர் வேறு மாவட்டத்துக்கு பயிற்சி பெற என்னை அனுப்பி வைத்தனர். எனவே, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நாகராஜன் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் மற்றும் போக்சோ பிரிவில் நேற்று மாலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் நாகராஜன் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பயிற்சியாளர் நாகராஜனின் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் எச்.ஜெயலட்சுமி (9444772222) தெரிவித்துள்ளார். புகார் கொடுப்பவர் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x