

கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வட்டாட்சியர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வட்டாட்சியரான வெங்கடேசன் என்பவர், சில வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அப்போது அவருக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டது.
“எனக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை; வட்டாட்சியர் நிலையில் இருக்கும் எனக்கே இந்தநிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன வாகும்?” என சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே, அவருக்கு ‘கரோனா தொற்றில்லை’ எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்தது. அவருக்கு ஏற்பட்டுள்ள முக வீக்கம் குறித்து கேட்டபோது, ‘ஒவ்வாமை காரணமாக அதுபோன்று இருக்கலாம்’ என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் வெங்கடேசன், திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனி வட்டாட்சியர் வெங்கடேச னின் மனைவி லட்சுமி பிரபாவிடம் கேட்டபோது, “மருத்துவர்கள் தாடைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது உடல்நலம் தேறி வருகிறார்” என்று தெரிவித்தார். மேலும், சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும், அரசு உதவிட வேண்டும் என்றும் வட்டாட்சியரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.