கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முன்களப் பணியாளர்களுக்கு பரவும் கரோனா: தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுவதால் அச்சம்

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முன்களப் பணியாளர்களுக்கு பரவும் கரோனா: தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுவதால் அச்சம்
Updated on
1 min read

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கும் கரோனா தொற்றும் பரவி வருவது சுகாதாரப் பணியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா 2-ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் முன்களப் பணியாளர்களாக செயல்படும் காவல்துறை, சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தொற்று பரவிவருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், இரு கட்ட தடுப்பூசி செலுத்திய நிலையில் தொற்று பரவி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 3 மருத்துவர்கள், 11 சுகாதார ஆய்வாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பது நேற்று தெரிய வந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் காவல்துறையைச் சேர்ந்த 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், உளுந்தூர் பேட்டையை அடுத்த குமாரமங் கலம் கோவிட் சிறப்பு சிகிச்சைமுகாமில் பணியாற்றி வந்த கர்ப்பிணி பெண் காவலர் ஒருவரும்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என பல தரப்பினரும் இரு கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் அவர்களில் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையே. தடுப்பூசி பாதுகாப்பானது. அதனால் நோய் பரவல் தடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், சிலருக்கு இம்மாதிரி தடுப்பூசி போட்ட நிலையிலும் நோய் தொற்று ஏற்பட்டு விடுகிறது” என்று தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் பாதிக் கப்பட்ட காவல்துறையினரிடம் விசாரித்தபோது, “எங்களில் 90 சதவீதம் பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், கரோனா 2-வது அலையில் 35 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பி விட்டனர். 15 பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் காவல் துறையைச் சேர்ந்த 98 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இருகட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in