Last Updated : 29 May, 2021 03:12 AM

 

Published : 29 May 2021 03:12 AM
Last Updated : 29 May 2021 03:12 AM

முல்லை பெரியாறு அணையின் தலைமதகு பகுதியில் தூய்மை பணி மும்முரம்: ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்பு

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஜூன் முதல் வாரத்தில் நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதற்காக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகு பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக முல்லை பெரியாறு அணை திகழ்கிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீர் சுரங்கப்பாதை வழியாக வந்து ராட்சத குழாய்கள் மூலம் லோயர்கேம்ப்பை வந்தடைகிறது. பின்பு அங்கிருந்து முல்லை பெரியாற்றின் வழியாக வைகை அணைக்கு செல்கிறது.

லோயர்கேம்ப்பில் இருந்து தேனி-பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. இப்பகுதியின் முதல்போக சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் நீர் திறப்பது வழக்கம். ஆனால் குறைவான நீர் இருப்பினால் ஒவ்வொரு ஆண்டும் காலம் கடந்தே நீர் திறக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி 131.10 அடி நீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 113 கன அடியும், வெளியேற்றம் 900 கன அடியாகவும் உள்ளது.

எனவே இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நீர் திறப்புக்கு ஏதுவாக தலைமை மதகு பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு வண்ணம் பூசப்பட்டு வருகிறது.

வைகை அணை

வைகை அணையில் தற்போது 66.50 அடி நீர்மட்டம் உள்ள நிலையில் நீர்வரத்து விநாடிக்கு 589 கன அடியும், வெளியேற்றம் 72 கன அடியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x