

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுடன் உறவினர்கள் அதிகளவு குவிவதை தடுக்க, நோயாளியுடன் அவரை உடனிருந்து கவனிக்க மருத்துவமனை நிர்வாகத்தால் பாஸ் கொடுக்கப்படும் ஒரு நபரை மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிறப்பு கரோனா மருத்துவமனையில் 1,800-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்களை அருகில் இருந்து கண்காணித்து சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் தற்போது இல்லை. இந்த தொற்றை பொறுத்தவரையில் நோயாளியை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கினால் மட்டுமே அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.
ஆனால் தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளை அவர் களுடைய உறவினர்களே மருத்துவமனையில் அருகில் இருந்து கண்காணிக்கும் நிலை உள்ளது. நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் ஷிப்ட் முறையில் மருத்துவமனைக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
அதனால் அவர்கள் மூலம் மதுரையில் அதிகளவு கரோனா தொற்று பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை ’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்கியிருக்க அனுமதி வழங்கி அவருக்கு மட்டும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பாஸ் வைத்திருக்கும் நபர் மட்டுமே மருத்துவமனையில் தங்கியிருக்க தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். இவர் வெளியே செல்லக்கூடாது. நோயாளி, உறவினருக்கான மூன்று வேளை சாப்பாடும் முறையாக அவர்களுடைய படுக்கைக்குச் சென்று கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க கரோனா வார்டில் தனிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பாஸ் இல்லாதவர்கள் மருத்துவ மனைக்குள் நுழைவதை தடுக்க, சூப்பர் ஸ்பெஷாலிட்டி கரோனா மருத்துவமனைக்கு வெளியே டென்ட் போட்டு தற்காலிக அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தலைமையில் ஷிப்ட் அடிப்படையில் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குள் செல்லும் நபர்களை கண்காணித்து முறைப்படுத்தி வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகளால் தற்போது உறவினர்கள் அதிகளவில் மருத்துவமனையில் குவிவதும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதும் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.