Published : 29 May 2021 03:13 AM
Last Updated : 29 May 2021 03:13 AM

தாமிரபரணி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க நடவடிக்கை: அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உறுதி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி குளத்தின் வரத்து கால்வாயை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி

தாமிரபரணி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி குளம் மற்றும் இக்குளத்துக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாயை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி நிர்வாகத்துக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

காயாமொழி குளத்துக்கான நீர்வரத்து கால்வாயை சமப்படுத்தி சீராக்கவும், குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளத்தை ஆழப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மூலம் குளத்தில் மீன் குஞ்சுக்களை விட்டு மீன் வளர்த்து அதனை ஊராட்சி மூலம் ஏலம் விட்டு வருமானத்தை ஈட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு குளமான இது நிரம்பினால் சுற்றியுள்ள கிராம கிணறுகளில் உள்ள உப்புநீர் நல்ல நீராக மாறும். தாமிரபரணி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுத்து அனைத்து குளங்களையும் தூர்வாரி, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடம்பா குளத்துக்கு கீழ் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார கருத்துரு தயார் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

திருச்செந்தூர் போலீஸ் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோட்டாட்சியர் தனப்பிரியா, வட்டாட்சியர் முருகேசன், ஊராட்சித் தலைவர்கள் காயாமொழி ராஜேஸ்வரன், மேல திருச்செந்தூர் மகாராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x