

வேலூர் மாநகரில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் சுற்றுபவர்களை பிடிக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி சுற்றுபவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கில் இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால், அதையும் மீறி வாகனங்களில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதையடுத்து, வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் முக்கிய சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு நேற்று காலை 9 மணி முதல் அமலுக்கு வந்தன.
அதன்படி, வேலூர் வடக்கு காவல் நிலையம் வழியாக நேரடியாக அண்ணா சாலைக்கு செல்ல முடியாது. காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் இருந்து பாகாயம், தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் மண்டி தெரு வழியாக பில்டர்பெட் சாலைக்கு சென்று அங்கிருந்து தெற்கு காவல் நிலையம் வழியாக அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும்.
அங்கிருந்து தொரப்பாடி செல்பவர்கள் ஆரணி சாலை, எஸ்பி பங்களா வழியாக உள்ள இணைப்பு சாலையில் சென்று தொரப்பாடிக்கு செல்லலாம். தொரப்பாடியில் இருந்து வருபவர்கள் ஊரீசு கல்லூரி, அண்ணா சாலை வழியாக செல்ல முடியாது.
புதிய மாநகராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம் வழியாகச் சென்று அண்ணா சாலையை அடைய முடியும். மேலும், குறுக்கு வழியாக பயன்படுத்தக் கூடிய அனைத்து சாலைகளையும் இரும்பு தடுப்புகளை வைத்து காவல் துறையினர் அடைத்துள்ளனர்.
கோட்டை சுற்றுச்சாலை வழியாக மக்கான் சந்திப்பு பகுதியை அடைய முடியாது. அதேபோல், காட்பாடியில் இருந்து வேலூர் செல்பவர்கள் நேஷனல் திரையரங்க சந்திப்பு வழியாக செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காகிதபட்டரை, ஆற்காடு சாலை வழியாக செல்ல வேண்டும். புதிய போக்குவரத்து மாற்றத்தை அடுத்து காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய போக்குவரத்து மாற்றத்தை அடுத்து காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.