

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் பிறந்த பெண் சிசுவை சாலை யோரம் அட்டைப் பெட்டியில் எரித்த தந்தைக்கு காவல் துறையினர் அறிவுரை வழங்கினர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் கடந்த 24-ம் தேதி அட்டைப் பெட்டியில் கருகிய நிலையில் வைக்கோலுடன் எரிந்த பச்சிளங் பெண் சிசுவின் உடல் கிடந்தது. இதுகுறித்து கிராமிய காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளின் பட்டியலை வைத்து விசாரணை செய்தனர். அதில், வேலூர் தொரப் பாடியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜோதி என்பவரின் பெண் சிசு அது என்பதை உறுதி செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் சுவாதி என்பவரை ஜோதி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இரண்டு தரப்பு பெற்றோர் வீட்டிலும் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டதால் தனியாக வசித்து வந்தனர்.
இதற்கிடையில், கர்ப்பமடைந்த சுவாதிக்கு பிரசவ வலி காரணமாக கடந்த 21-ம் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சுவாதிக்கு கடந்த 23-ம் தேதி உயிரிழந்த நிலையில் பெண் சிசு பிறந்துள்ளது. சிசுவின் உடலை ஜோதியிடம் ஒப்படைத்தனர். ஏற்கெனவே மன வேதனையில் இருந்த ஜோதி, உயிரிழந்த சிசுவை சாலையோரத்தில் அட்டைப்பெட்டியில் போட்டு எரித்தது தெரியவந்தது.
இந்த விவரங்களை சேகரித்த காவல் துறையினர் ஜோதிக்கு அறிவுரை கூறியதுடன் சிசுவின் உடலை ஒப்படைத்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்யுமாறு அறிவுறுத்தினர்.