

‘‘கட்டி பல ஆண்டுகளான சமத்துவபுரம் வீடுகள் விரைவில் திறக்கப்படும்,’’ என ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்படி, சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைப்பட்டியில் 2010-ம் ஆண்டு சமத்துவபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.1.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தெடங்கப்பட்டன. அங்கு ரேஷன் கடை, தார்ச் சாலை, குடிநீர் தொட்டி, தெருவிளக்கு வசதிகளுடன் 100 வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடையாத நிலையில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தலை அடுத்து மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2012-ம் ஆண்டு முழுமை அடைந்தன. கடந்த 2016-ம் ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகும் சமத்துவபுரம் திறக்கவில்லை. இதனால் வீடுகள் பழுதடைந்து வீணாகி வந்தன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால், சமத்துவபுரம் வீடுகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவபுரம் வீடுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சமத்துவபுரத்தை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமத்துவபுர பணிகள் நடக்கும்போதே தேர்தல் வந்துவிட்டது. அதன்பிறகு அதிமுக அரசு கட்டிடங்களை திறக்கவில்லை.
இதுகுறித்து நான் சட்டப்பேரவையில் பேசியும் பயனில்லை. இந்த தேர்தலில் சமத்துவபுரம் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். விரைவில் பயனாளிகள் தேர்வு செய்து, கட்டிடங்கள் திறக்கப்படும், என்று கூறினார்.