முல்லைப் பெரியாறு அணையின் தலைமதகு பகுதியில் தூய்மைப் பணி மும்முரம்: ஜூன் முதல் வாரத்தில் நீர் திறக்க வாய்ப்பு

முல்லைப் பெரியாறு அணையில் தலை மதகுப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் தலை மதகுப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஜூன் முதல்வாரத்தில் நீர்திறக்க வாய்ப்புள்ளது. இதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் மதகு பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீர் சுரங்கப்பாதை வழியாக வந்து ராட்சதகுழாய்கள் மூலம் லோயர்கேம்பை வந்தடைகிறது. பின்பு அங்கிருந்து முல்லைப்பெரியாற்றின் வழியாக வைகை அணைக்கு செல்கிறது.

லோயர்கேம்ப்பில் இருந்து தேனி-பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது.

இப்பகுதியின் முதல்போக சாகுபடிக்காக ஜூன் முதல்வாரத்தில் நீர்திறப்பது வழக்கம். ஆனால் 130அடிக்கும் குறைவான நீர் இருப்பினால் ஒவ்வொரு ஆண்டும் காலம் கடந்தே நீர்திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளது.இன்றைய நிலவரப்படி 131.10அடிநீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 2ஆயிரத்து 113கனஅடியும், வெளியேற்றம் 900கனஅடியாகவும் உள்ளது.

எனவே இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நீர்திறப்பிற்கு ஏதுவாக தலைமை மதகு பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது.

வைகை அணையைப் பொறுத்தளவில் தற்போது 66.50அடி நீர்மட்டம் உள்ள நிலையில் நீர்வரத்து விநாடிக்கு 589 கனஅடியும், வெளியேற்றம் 72 கனஅடியாகவும் உள்ளது.

பெரியகுளம் அருகே 57அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையில் இன்று 53.5அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வைகைஅணையைப் பொறுத்தளவில் முதல்கட்ட வெள்ள அறிவிப்பும், மஞ்சளாறில் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு, வைகை மற்றும் மஞ்சளாறு அணைகள் நீர்திறப்பிற்கு தயாராகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in