Published : 28 May 2021 06:59 PM
Last Updated : 28 May 2021 06:59 PM

ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என ஈபிஎஸ் கூறுவது தவறு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை

ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற முன்னாள் முதல்வர் பழனிசாமியின் கூற்று தவறானது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று (மே 28) சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஆக்சிஜன் படுக்கைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்குக் கூடுதலாக 120 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் மற்றும் 6 படுக்கைகள் கொண்ட கருப்புப் பூஞ்சை வார்டினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்.பி ஆகியோர் தலைமையில், உதயநிதி எம்எல்ஏ இன்று தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

"தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரோனா தடுப்புப் பணிகளை முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்களில் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டு பாராட்டைத் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மே 7-ம் தேதி வரை காபந்து அரசின் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருந்தார். அன்றைய நிலையில், ஆக்சிஜன் இருப்பு தமிழகத்தில் 230 மெட்ரிக் டன்னாக இருந்தது. இன்றைக்கு முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக, ரூர்கெலா, துர்காபூர், ஜம்செட்பூர் ஆகிய ஊர்களிலிருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு இன்று தமிழகத்தின் இருப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியிலே ஒரு வார காலம் முகாமிட்டு, தமிழகத்தின் தேவையை மத்திய அரசின் மூலம் கேட்டுப் பெற்றுள்ளார். ஆகையினால் ஆக்சிஜன் பற்றாக்குறையினால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற முன்னாள் முதல்வரின் கூற்று தவறானது".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x