

தமிழகத்தில் கரோனா பரவல் குறையாததால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் ஜூன் 11 வரை அவசர வழக்குகள் மட்டும் காணொலியில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் ஜூன் 11 வரை காணொலி வழியாக அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும்.
இந்த காலக்கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் அவசரத் தன்மையை பொறுப்பு நீதிபதிகள் முடிவு செய்வர். மற்ற வழக்குகள் அனைத்தும் வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்படும்.
தேவையில்லாமல் வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்ந்தவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையக்கூடாது. நேரடியாக சென்று சம்மன்கள் வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு பதிவாளர் ஜெனரல் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1 முதல் 11 வரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மேல்முறையீடு மனுககளையும், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஆர்.தாரணி அமர்வு ஆள்கொணர்வு மனுக்கள் மற்றும் குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிப்பர்.
ஜூன் 1 முதல் 6 வரை நீதிபதி ஜெ.நிஷாபானு, ரிட் மனுக்களையும், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காலையில் உரிமையியல் வழக்குகளையும், மதியத்துக்கு மேல் முன்ஜாமீன் மனுக்களையும் விசாரிக்கின்றனர். நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்ஜாமீ்ன் மனுக்கள் தவிர்த்து பிற குற்றவியல் மனுக்களை விசாரி்க்கின்றனர்.
ஜூன் 8 முதல் 11 வரை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, ரிட் மனுக்களையும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், காலையில் உரிமையியல் வழக்குகளையும், மதியத்துக்கு பிறகு முன்ஜாமீன் மனுக்களையும், நீதிபதி ஜி.சந்திரசேகரன், முன்ஜாமீன் தவிர்த்த பிற குற்றவியல் மனுக்களையும் விசாரிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.