

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஆக்சிஜன் படுக்கைகள் அதிக அளவில் உள்ளன என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்று (மே 28) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்குக் கூடுதலாக 120 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள், 6 படுக்கைகள் கொண்ட கருப்புப் பூஞ்சை வார்டினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் தலைமையில், உதயநிதி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
"முதல்வர், அதிகமாகத் தொற்று ஏற்படும் மாவட்டங்கள் எவையென்று கண்டறிந்து, அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து கலந்தாலோசனை செய்வதோடு மட்டுமல்லாமல், கடந்த வாரம் சேலம், திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். அதன் விளைவால் தொற்று குறைந்திருக்கிறது.
முதல்வர், தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்களிடம் பணிகளை வேகப்படுத்துவதால் தொற்றின் அளவு குறைந்துள்ளது.
என்னையும், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளரையும் மாவட்டங்கள்தோறும் அனுப்பி, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியினைத் தீவிரப்படுத்தச் செய்வதும், இந்தத் தொற்றின் அளவினைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அனுப்பினார்.
கடந்த மூன்று நாட்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், அனைத்து சேவைத் துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் ஆகியோரோடு ஆய்வு நடத்தியிருக்கிறோம்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, மிகப்பெரிய அளவில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது.
18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ அலுவலர்கள் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வயதுக்கு உட்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதன் விளைவாக, நேற்று ஒரே நாளில் 3.23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஆக்சிஜன் படுக்கைகள் அதிக அளவில் உள்ளன. ஆர்.டி-பிசிஆர் பரிசோதனை தமிழகத்தில் 276 இடங்களில் ஒரு நாளைக்கு 1.70 லட்சத்தைக் கடந்து செய்யப்படுகிறது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.