Last Updated : 28 May, 2021 05:36 PM

 

Published : 28 May 2021 05:36 PM
Last Updated : 28 May 2021 05:36 PM

குமரியில் மழை வெள்ள சேத மதிப்புகளை விரைந்து கணக்கெடுத்து அறிக்கை: அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

நாகர்கோவில்

குமரியில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழைவெள்ள சேத மதிப்பை விரைந்து கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேளாண், மற்றும் தோட்டக்கலைத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி முதல் 3 நாட்களாக பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் அணைகள், குளங்கள், நீர்நிலைகள் நிரம்பின. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குமரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இழப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் வருவாய்த்துற மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் இரு நாட்களாக குமரி மாவட்டத்தில் வெள்ளசேத பகுதிகளை இன்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி, குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2வது நாளாக இன்று ஆய்வு நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டம் வேம்பனூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த உளுந்து, பயிறு போன்ற விளைநிலங்களையும், கல்குளம் வட்டம் வெள்ளிமலை, கல்படி ஏலா பகுதியில் கனமழையால் சேதமடைந்த வாழை தோட்டங்களையும் பார்வையிட்டனர்.

அப்போது விவசாய நிலங்களில் மழை சேத மதிப்புகளை விரைந்து கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினருக்கு அமைச்சர் ராமச்சந்திரன் அறிவறுத்தினார்.

மேலும் குளச்சல் சிங்காரவேலர் காலனியில் செல்லும் ஏ.வி.எம். கால்வாயில் நீர்நிரம்பி ஓடுவதையும், கால்வாய் கரையோர பகுதிகளில் வசித்த வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள லோபஸ் அரங்கம், கோடிமுனை புனித பர்தலோமியர் அரங்கம், வாணியக்குடி புனித யோசேப் அரங்கம், குறும்பனை இனிகோ அரங்கம், கலிங்கராஜபுரம் இயற்கை பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்குமாறு வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் குறும்பனை ஈழக்காணி தெரு போன்ற பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை நீர்ஆதார அமைப்பினருக்கு அமைச்சர் ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x