

தடுப்பூசி செலுத்தும் பணிக்கு எந்த அரசியல் கட்சியினர் இடையூறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி கிளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், திருச்சி புளூ சன் பவுண்டேஷன் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனைக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.ஸ்டாலின்குமார் (துறையூர் தனி), எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), எஸ்.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), பி.அப்துல் சமது (மணப்பாறை), மெட்ரோ ரோட்டரி சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜகோபால், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி கிளைத் தலைவர் செங்குட்டுவன், புளூ சன் பவுண்டேஷன் நிர்வாகி காயத்ரி, அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, ''கரோனா பரவலைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கரோனா பரவாமல் கட்டுப்படுத்த முடியும். அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளைப் பார்க்க அனுமதி கிடையாது என்றால் சண்டை போடுகின்றனர். இவ்வாறு அவர்கள் மூலமும் கரோனா பரவுகிறது. கரோனா நோயாளிகளை உறவினர்கள், கணவர்- மனைவி சென்று பார்ப்பதைத் தடுக்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி இடும் முகாம்களுக்கு அரசியல் கட்சியினர் சென்று எவ்வளவு தடுப்பூசி வந்தது, எத்தனை பேருக்கு இடப்பட்டுள்ளது என்றெல்லாம் கேள்வி கேட்டுப் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். அரசியல் கட்சியினர் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். இனி அரசியல் கட்சியினர் யாராவது தடுப்பூசி இடும் முகாம்களுக்குச் சென்று பணிக்கு இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தொடர்ந்து, திருச்சி கலையரங்க மண்டபத்தில் வங்கி அலுவலர்கள் மற்றும் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி இடும் முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, மணிகண்டம் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு சித்தா கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் 252 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், லால்குடி அரசு மருத்துவமனைக்கு PEAS டிரஸ்ட் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். நிகழ்ச்சியில் லால்குடி எம்எல்ஏ அ.சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.