Last Updated : 28 May, 2021 04:02 PM

 

Published : 28 May 2021 04:02 PM
Last Updated : 28 May 2021 04:02 PM

45 வயதுக்கு மேற்பட்டோர் 100% சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமம்: புதுக்குப்பத்தை அறிவித்த ஆளுநர் தமிழிசை

கிராமங்கள்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. முழுமையாகத் தடுப்பூசி போட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். 45 வயதுக்கு மேற்பட்டோர் நூறு சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமமாக புதுக்குப்பம் அறிவிக்கப்பட்டது.

புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் எனத் திருவிழாவும் நடத்தப்பட்டது. அதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்நிலையில் கிராம மக்களுக்குத் தடுப்பூசி போடும் வகையில் முகாம்கள் நடத்தப்படும் என ஆளுநர் தமிழிசை கூறியிருந்தார். இதன்படி கிராமங்களில் தடுப்பூசி முகாம்களையும் அவர் இன்று தொடங்கி வைத்தார்.

புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாம் தொடக்க விழாவுக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். ஆளுநர் தமிழிசை முகாமைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் முதலில் வைத்திக்குப்பம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு பகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு, புதுச்சேரியைப் பாதுகாப்பான மாநிலமாகவும், முழுத் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றப்படும்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் கரோனாவை ஒழிக்க முடியும். தொகுதி எம்எல்ஏக்களும் தங்கள் பகுதி மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போடுகிறோமா அவ்வளவு சீக்கிரம் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படும். சுகாதாரத்துறையில் எங்களின் நிர்வாகத் திறமையை மட்டுமின்றி, நானும், சுகாதாரத்துறைச் செயலர் அருணும் டாக்டர்கள் என்பதால் மருத்துவத் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறோம். இதனால்தான் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, ஆளுநர் தமிழிசை பச்சைவாழியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதையடுத்து புதுக்குப்பம் கிராமத்தில் முகாமை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். புதுக்குப்பம் கிராமத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் நூறு சதவீதம் தடுப்பூசி எடுத்துகொண்ட முதல் கிராமம் என்று ஆளுநர் அறிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "புதுக்குப்பத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் நூறு சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுச் சான்றிதழ் தரப்பட்டுள்ளது. நாட்டுக்கே முன்மாதிரியாக இக்கிராமம் உள்ளது. அனைத்து கிராமங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டு கரோனா இல்லாத கிராமங்களை உருவாக்க பிரதமர் மோடி ஆட்சியர்களுக்கான கூட்டத்தில் தெரிவித்தார். அதன்படி கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. கரோனாவை விரட்ட எதிர்ப்பு சக்தி தேவை. நன்றாகச் சாப்பிடுங்கள், நம்ம ஊர் ரசமும் நோய் எதிர்ப்பு சக்திக்கான உதாரணம். முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி தரும் இஞ்சி, சுக்கு, அதிமதுரம் போன்ற மூலிகைகளைப் பயன்படுத்தும் வழக்கம் நமக்கு உண்டு. அந்த மூலிகைகள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன" என்று ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x