Published : 28 May 2021 02:50 PM
Last Updated : 28 May 2021 02:50 PM

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

பயனாளிகளிடம் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதுவரை சுமார் 2.7 லட்சம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் தன்மைக்கேற்றவாறு தகுதியான மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

துறை ரீதியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, இதன் மீது எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இத்துறையின் கீழ் பயனடைந்த தேனி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார். அவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கிடைக்கப்பெற்ற பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், கரோனா தொற்று பரவாமல் இருக்க ஒவ்வொரு பயனாளிகளிடமும் முகக்கவசம் கட்டாயம் அணியுமாறு அறிவுறுத்தினார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x