

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது என்றும், இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது.
மேலும், இது கொள்கை முடிவு என்பதால், அரசுதான் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதேபோல, கரோனா ஊரடங்கின்போது நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி ஜலாலுதீன் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.