செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை மத்திய அரசு நடத்த வேண்டும்; இல்லாவிட்டால் தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தடுப்பூசி வளாகத்தை ஏற்று நடத்த தமிழக அரசு முன்வந்திருப்பது பயனளிக்கும் திருப்பம் ஆகும் என அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வலியுறுத்தினர்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதன் மூலம் தடுப்பூசி தயாரிப்பில் தமிழகம் தன்னிறைவை அடைய முடியும். இந்த நடவடிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை மத்திய அரசு நடத்த வேண்டும்; இல்லாவிட்டால் தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தடுப்பூசி வளாகத்தை ஏற்று நடத்த தமிழக அரசு முன்வந்திருப்பது பயனளிக்கும் திருப்பம் ஆகும்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசிடம் உடனடியாக ஒப்படைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். கரோனா தடுப்பூசி உற்பத்திக்கான தொழில்நுட்பங்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சராக நான் பதவி வகித்தபோது, தடுப்பூசி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்காக செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் அமைக்கும் திட்டத்தை 2008ஆம் ஆண்டு உருவாக்கி ஒப்புதலும் அளித்தேன். உடனடியாக நிதியும் ஒதுக்கப்பட்டுப் பணிகளும் தொடங்கப்பட்டன.

கரோனா தடுப்பூசி மட்டுமின்றி, இந்தியாவின் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்திற்கு தேவையான அனைத்து 7 வகையான தடுப்பூசிகளையும் உலகத்தரம் வாய்ந்த செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது''.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in