

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணி திட்டத்தின்கீழ், 1,093 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகளைக் கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 28) வெளியிட்ட அறிவிப்பு:
"பெருநகர மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கெனவே நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணி திட்டத்தை 27.05.2021 அன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்தார்.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடக்கும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் எனக் கண்டறியப்பட்ட 113 இடங்களில் 27.05.2021 அன்று தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியின் மூலம் 15 மண்டலங்களிலும் 27.05.2021 அன்று ஒருநாள் மட்டும் 264 மெட்ரிக் டன் குப்பைகளும், 829 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளும் என மொத்தம் 1,093 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து தீவிரப்படுத்தவும், மாநகராட்சியின் தூய்மையைப் பராமரிக்கவும், மண்டலங்களுக்குக் கீழ்க்கண்ட அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நாள்தோறும் காலை நேரத்தில் ஆய்வு செய்து அதுகுறித்த விவரங்களைத் தலைமையிடத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த தீவிர தூய்மைப் பணி திட்டத்தைப் பயன்படுத்தி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க அலுவலர்கள் அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என, ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.