

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் மட்டுமே வங்கக்கடலில் உருவானது. இதனால், குறைவான மழையே தமிழகத்துக்கு கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 28 முதல் தற்போது வரை வங்கக்கடலில் 5 காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகியுள்ளன.
இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நிலைகுலைந்தன.
குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சென்னை மாநகரையே புரட்டிப் போட்டுவிட்டது. வெள்ளம் வடிந்து ஒரு வாரமாகியும் பல இடங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. சில இடங்களில் வெள்ளம் வடியாமலே உள்ளது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 6 மாலை 6 மணியளவிலான செயற்கைக்கோள் படம். | படம் உதவி: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்.
இதற்கிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆனால், அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் பாகுலேயன் தம்பி கூறியதாவது:
குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலையுடன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் 6 முதல் 12 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யலாம். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. எனவே, மழையினால் ஏற்படும் சேதங்களை மட்டும் எதிர்பார்க்கலாம். சென்னையில் 6 செ.மீ. மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஜெனரல் பாகுலேயன் தெரிவித்தார்.
ஏற்கெனவே, மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்ட மக்கள், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அறிவிப்பால் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று காலை அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், நிவாரணப் பணிகளை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழ்ச்சேவை, காட்டுமயிலூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, மேல்மருவத்தூரில் 16, திருப்பரங்குன்றம் 14, பண்ருட்டி, உத்திரமேரூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை பொறுத்தவரை, தாம்பரத்தில் 3, தரமணி, செம்பரம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
63 சதவீதம் அதிகம்
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட (44 செ.மீ.) 12 சதவீதம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், பருவமழை தொடங்கி 67 நாட்களில், 62 செ.மீ. மழை பெய்துள்ளது. இது, தற்போது வரையான இயல்பை (39 செ.மீ.) காட்டிலும் 63 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல, சென்னையில் இதுவரை 158 (இயல்பாக பெய்ய வேண்டியது 68), கடலூரில் 119 (57), காஞ்சிபுரத்தில் 178 (57), நாகை 120 (74), திருவள்ளூர் 143 (51) செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்னும் பருவமழை முடிய 23 நாட்கள் உள்ள நிலையில் மழையின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.