Published : 28 May 2021 01:07 PM
Last Updated : 28 May 2021 01:07 PM

தெருவோர மக்களுக்கும் தேவை நிவாரணம்!

பிரதிநிதித்துவப் படம்

கரோனா வைரஸின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தளர்வுகளற்ற இந்த ஊரடங்கினால் சாலைகளிலும் தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இன்றி ஊரே வெறிச்சோடிக் கிடக்கின்றது.

இந்நிலையில், நகர்ப்புறங்களில் சாலையோரங்களையே உறைவிடமாகக் கொண்டு உயிர்வாழ்ந்து வரும் தெருவோர மக்களின் நிலைமை மிக மோசமாகியுள்ளது. அவர்களில் பலருக்கு உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சித்தபிரமை பிடித்ததுபோல் இருப்பவர்கள்.

தெருவில் போவோர் வருவோரின் உதவியால் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த இவர்களின் இன்றைய நிலைமை கண்கலங்க வைக்கிறது. உணவுக் கழிவு கொட்டப்படும் குப்பைத் தொட்டிகள் போன்ற இடங்கள்கூடக் காய்ந்து கிடப்பதால், உணவுகள் கிடைக்காமல் பலர் பரிதாபமாகச் சுற்றியலைகின்றனர்.

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லியில் இதுபோல் தெருவோரம் வசிப்பவர்கள், உணவு வழங்கும் ஒரு வாகனத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் அவலத்தை, பிரசாந்த் குமார் என்பவர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

கரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளும் மக்களுக்கான நிவாரண உதவிகளும் அரசால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குக் குடும்ப அட்டைகள் மூலம் நிவாரணத் தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்துவருகின்றனர். இதன் முதல், தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் தொழிலாளர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமைத்த உணவையோ அல்லது உணவுப் பொருட்களையோ வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தியும் நாம் அறிந்ததே. இவ்வாறு அரசும் நீதிமன்றங்களும் அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன.

ஆனால், அதே நேரம் சமூகத்தின் ஒரு பகுதியினரான தெருவோர மக்கள் இருக்க இடமின்றி, ஆதரிக்க உறவுகள் இன்றித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இவ்வளவு காலம் உதவிவந்த மக்களும் ஊரடங்கால் வீட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதால், உயிர் வாழ வழியின்றி விழிபிதுங்கி வீதிகளிலும் பூட்டிய கடைகளின் முன்பும் வெறிச்சோடிய பேருந்து நிலையங்களின் இருக்கைகளிலும் பட்டினியோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல், அவதிப்படுபவர்களைக் கண்டும் காணாமல் நமது பாதுகாப்பின் மீது மட்டும் அக்கறையுடையவர்களாக பெரும்பாலான மக்களும் ஒதுங்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

இத்தகையோருக்கு ஆங்காங்கே சில சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கிக் காப்பாற்றி வருகின்றனர். ஆனால், தமிழகமெங்கும் இதுபோல் தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை இந்த ஊரடங்கு காலத்தில் கவனித்துப் பசியாற்றுவது என்பது சில தனிமனிதர்கள், தொண்டு நிறுவனங்களால் மட்டுமே நிறைவு செய்ய இயலாத காரியம்.

ஆனால், அரசு நினைத்தால் இதில் கவனம் செலுத்தி, இவர்களது உணவுத் தேவையையும் உறைவிடத் தேவையையும் பூர்த்தி செய்து இத்தகையோரின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை முறைப்படி செய்ய முடியும்.

தெருவோரம் நடமாடும் கால்நடைகளுக்குக்கூட சிலர் அக்கறையுடன் உணவு வழங்குகிறார்கள். அதேநேரம் சக மக்களை இப்படிக் கண்டுகொள்ளாமல் விடுவது மனித நேயமற்ற செயல்.

எனவே, இவர்களைக் காக்கவும் நலனைப் பேணவும் அரசு உடனடியான தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: முனைவர் ஜான்சி பால்ராஜ்,

தொடர்புக்கு: jansy.emmima@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x