Last Updated : 28 May, 2021 12:31 PM

 

Published : 28 May 2021 12:31 PM
Last Updated : 28 May 2021 12:31 PM

நிதி நெருக்கடி; புதுவையிலும் கரோனா நிவாரணத் தொகையை இரு தவணைகளாகத் தர திட்டம்

நிதி நெருக்கடியால் புதுச்சேரியிலும் கரோனா நிவாரணத் தொகையை இரு தவணைகளாகத் தர திட்டமிட்டுள்ளனர். ஜூன் மாதம் 3.5 லட்சம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் கிடைக்க வாய்ப்புள்ளது.

புதுவையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பகல் 12 வரை மட்டுமே கடைகள் இயங்கும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பின்படி சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ என 2 மாத அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்டு, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. புதுவையிலும் கரோனா நிவாரணம் வழங்க மக்கள் கோரினர். இந்நிலையில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகையை முதல்வர் ரங்கசாமி கடந்த 26-ம் தேதி அறிவித்தார்.

நிவாரணத் தொகை எப்போது கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் விசாரித்தபோது, "நிவாரணத் தொகை வழங்குவதற்கான கோப்பு நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் உள்ள மூன்றரை லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்க மொத்தம் ரூ.105 கோடி தேவைப்படுகிறது. அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் முழு நிவாரணத் தொகையையும் ஒரே நேரத்தில் வழங்க முடியாத நிலை உள்ளது.

இதனால் தமிழகத்தைப் போல 2 தவணைகளில் நிவாரணத் தொகையைப் பிரித்து வழங்க திட்டமிடப்பட்டு, முதல் தவணையாக ரூ.1,500, 2-வது தவணையாக ரூ.1,500 எனப் பிரித்து வழங்க அதிகாரிகள் கோப்பு தயாரித்துள்ளனர்.

இந்தக் கோப்பு முதல்வர் ரங்கசாமியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் 2 தவணையாக நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்படும். இந்த நடைமுறைக்குப் பிறகே நிவாரணத் தொகை மக்களுக்குப் பட்டுவாடா செய்யப்படும். இதற்குக் குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு மேலாகும். இந்த நிவாரணத் தொகையின் முதல் தவணை ஜூன் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x