Published : 28 May 2021 12:02 PM
Last Updated : 28 May 2021 12:02 PM

ஓசூர் அருகே 175 நரிக்குறவர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள்; ஐஎன்டியுசி வழங்கல்

ஓசூர் ஐஎன்டியுசி சார்பில் கரியசந்திரம் கிராமத்தில் வசிக்கும் 175-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு உட்பட 11 வகையான உணவுப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.

ஓசூர் பேரிகை அடுத்துள்ள நெரிகம் ஊராட்சியில் கரியசந்திரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 175-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. இந்த நரிக்குறவர்கள் தங்களுடைய கைவினைப் பொருட்களான ஊசிமணி, பாசிமணி உள்ளிட்ட மணி மாலைகள், பனை ஓலையிலான வண்ணமிடப்பட்ட அலங்காரக் கூடைகள், பீங்கான் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரித்து, அருகில் உள்ள ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

தற்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நரிக்குறவர்கள் தங்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய வெளியில் செல்ல முடியாமல் கரியசந்திரம் கிராமத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த கிராம மக்களுக்கு ஐஎன்டியுசி சார்பில் கரோனா நிவாரணமாக உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கரியமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஐஎன்டியுசி தேசியச் செயலாளரும், முன்னாள் எம்எல்எவுமான கே.ஏ.மனோகரன் கலந்துகொண்டு, 175 குடும்பங்களுக்குத் தலா 11 வகையான உணவுப் பொருட்களை வழங்கினார். இதில் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, சேமியா, மஞ்சள்தூள், சாம்பார் தூள், கொத்தமல்லித் தூள், உப்பு, குளியல் சோப்பு ஆகியவை அடங்கும். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கரியமங்கலம் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் வீடுகள்

இதுகுறித்து சூளகிரி வட்டாட்சியர் பூவிதன் கூறும்போது, ''கரியசந்திரம் கிராமத்தில் வசிக்கும் 175 நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய கிராமத்திலேயே கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கிராமத்தில் உள்ள நரிக்குறவர்கள் அனைவரும் பங்கேற்று கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். யாருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x