Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

மேலாளர் பேசுவதாக ஏமாற்றி ஓடிபி எண்ணை பெற்று வங்கிக் கணக்கில் இருந்து ரூ.53 லட்சம் சுருட்ட முயற்சி: சைபர் கிரைம் போலீஸாரின் நடவடிக்கையால் பணம் மீட்பு

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.53 லட்சத்தை டிஜிட்டல் கொள்ளையர்கள் சுருட்ட முயன்றனர். தக்கசமயத்தில் சைபர் கிரைம் போலீஸாரிடம் அவர் புகார் கொடுத்ததால், பணம் காப்பாற்றப்பட்டது.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் அன்பரசு (62). மத்திய அரசின் ஓஎன்ஜிசிநிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் அப்பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். பணி ஓய்வின்போது கிடைத்த பணத்தையும் நிலையான வைப்பாக வங்கியில் போட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில், அன்பரசுவின் கைபேசிக்கு கடந்த 25-ம் தேதி ஒரு குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்), தொடர்ந்து ஓர் அழைப்பும் வந்தது. வங்கி மேலாளர் பேசுவதாக அறிமுகம் செய்துகொண்ட நபர், ‘‘உங்கள்வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக உங்களுக்கு ஓடிபி எண் அனுப்பியுள்ளேன். அதை பார்த்து உடனேதெரிவியுங்கள். இல்லாவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கப்படுவதோடு, அதில் உள்ள பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படும்’’ என்று கூறியுள்ளார்.

இதனால் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்த அன்பரசு, தனது கைபேசிக்கு வந்த ஓடிபி எண்ணை அவரிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில், அன்பரசுவின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.53.25 லட்சம் பணம் மாற்றப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

16 மணி நேரத்தில்..

அதிர்ச்சி அடைந்த அன்பரசு, உடனே வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி நடந்துள்ளதால், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதனால், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்ற அவரை, அண்ணா நகர் காவல் துணை ஆணையரிடம் போலீஸார் அனுப்பிவைத்தனர். அவர் அங்கு கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் இறங்கினர். 16 மணி நேரத்தில் அவரது பணம் பத்திரமாக மீட்கப்பட்டது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:

நிலையான வைப்புக் கணக்கில் இருந்து பணத்தை நேரடியாக எடுக்க முடியாது என்பதால், அதை முதலில் சேமிப்பு கணக்குக்கு மாற்றும் முயற்சியில் டிஜிட்டல் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றத்தில் அன்பரசுவும் தனக்கு வந்த ஓடிபி எண்ணை அவர்களுக்கு அனுப்பியதால், பணத்தை சேமிப்புக் கணக்குக்கு மாற்றினர்.

அதேபோல, இன்னொரு ஓடிபி எண்ணை அவருக்கு அனுப்பி, பணத்தை சேமிப்புக் கணக்கில் இருந்தும் சுருட்ட அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அன்பரசு சுதாரித்து உடனே சைபர் கிரைம் போலீஸாரை அணுகியதால், பணம் காப்பாற்றப்பட்டது.

வங்கிக் கணக்குகளில் இதுபோன்ற மோசடி நடப்பது தெரியவந்தால், உடனடியாக வங்கியையோ, சைபர் கிரைம் போலீஸாரையோ அணுகினால் பணம் கொள்ளை போகாமல் தடுத்துவிடலாம்.

தவிர, ஓடிபி எண்ணை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது அவசியம். வெளி நபர்களிடம் ஓடிபி எண்ணை பகிர்வது ஆபத்தாகும்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

மோசடியில் ஈடுபட்ட டிஜிட்டல் கொள்ளையர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x