கடலூர், வேலூர் மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோயால் 4 பேர் உயிரிழப்பு

கடலூர், வேலூர் மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோயால் 4 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கடலூர், வேலூர் மாவட்டங்களில் ஒரு பெண் உட்பட 4 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த கண்ணன்(54),பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(54), வேப்பூர்ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (50) ஆகிய 3 பேருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதில் கண்ணனும், ராஜேஸ்வரியும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ரவிக்குமார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 பேரும் நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள் ஆவர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 3 பேருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரித்து வந்தது. திடீரென கை, கால், கண் போன்றவை கருப்பு நிறமாக மாறி வீங்கியுள்ளது. தொடர்ந்து 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கண்ணன் 2 தினங்களுக்கு முன்பும், ராஜேஸ்வரி நேற்று முன்தினமும் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த ரவிக்குமாரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 பேர் கருப்பு பூஞ்சை நோயில் உயிரிழந்திருப்பதை மாவட்ட சுகாதாரத் துறையினர் நேற்று உறுதி செய்தனர்.

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (44) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா பாதிப்பால், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மீண்டும் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பது தெரியவந்து.

அவரது இடது கண் பகுதியில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண் அகற்றப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் திடீரென அவர் உயிரிழந்தார்.

சேலத்தில் 39 பேர் அனுமதி

சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சைநோய் அறிகுறியுடன் 31 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக அரசு மருத்துவமனையில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டுஉள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருப்பு பூஞ்சை நோயை தடுப்பது குறித்தும், மேலும் பரவாமல் தடுக்கவும் மாவட்டம் முழுவதும் சுகாதார அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in