ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட ரேஷன் கடையில்: தரமில்லாத அரிசி விநியோகிக்கப்பட்டதாக புகார்

ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட ரேஷன் கடையில்: தரமில்லாத அரிசி விநியோகிக்கப்பட்டதாக புகார்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சி ராக்கியாபாளையம்-2 நியாயவிலைக் கடையில், விலையில்லா அரிசி நேற்று விநியோகம் செய்யப்பட்டது. இந்த அரிசி மிகவும் தரமற்றதாகவும், கருப்பு நிறத்திலும், அசுத்தமாகவும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஊத்துக்குளி ரயில்வே காலனி மக்கள் கூறும்போது, "பேரிடர் நேரத்தில் பொது விநியோகத்தை நம்பித்தான் பலகுடும்பங்கள் உள்ளன. நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாக இருக்கும் பட்சத்தில், தற்போது எந்தவித வருவாயும் இன்றி வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கு ரேஷன் கடையில்விநியோகிக்கும் அரிசியின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் உண்டு. ஆனால், இந்த அரிசியை வாங்கி உணவு சமைத்து சாப்பிட முடியவில்லை" என்றனர்.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நியாயவிலைக் கடை பணியாளரிடம் விசாரித்துள்ளனர். கடையில் உள்ள அனைத்து மூட்டைகளிலும் இதேபோல தான் அரிசி உள்ளது என கூறியுள்ளனர்.

ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலரிடம் சென்று அரிசியை ஒப்படைத்து, தரமான அரிசி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

பின்னர், மாவட்ட வழங்கல் அலுவலரிடமும், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு திருப்பூர் மண்டல மேலாளரிடமும் ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார் பேசினார்.

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மேலாளர் கூறும்போது, "எங்களுக்கு தஞ்சாவூரில் இருந்து ரயிலில் வந்த அரிசியே, இவ்வாறாகத்தான் உள்ளது. நிர்ணயித்ததரத்துக்கு அரிசி உள்ளது. இதையே விநியோகம் செய்யுங்கள் என உயர்அதிகாரிகள் கூறுகிறார்கள்" என்றார்.

மேலும், தரமான அரிசி வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனுக்கு, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டது.

மாவட்ட வழங்கல் அலுவலர் வி.கணேசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகதான் அரிசியை கொள்முதல் செய்து வழங்குகிறோம். ஏற்கெனவே ஊத்துக்குளி பகுதியில் ஒரு கடையில் புகார் வந்த நிலையில் அதனை மாற்றி கொடுத்தோம். தற்போது ராக்கியாபாளையம் கடையில் இருந்து புகார் வந்துள்ளது. வட்ட வழங்கல் அலுவலரை நேரில் சென்று விசாரிக்குமாறு கூறியுள்ளேன். விசாரித்துசொல்வதாக அவரும் கூறியுள்ளார்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in