Published : 10 Dec 2015 04:45 PM
Last Updated : 10 Dec 2015 04:45 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள்: இரவு பகலாக தன்னார்வமாக இணைந்து பணியாற்றும் கோவை பெண்கள்

கடலூர், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவுவதற்காக ஒரு வாரமாக இரவு பகலாக கோவை 67-வது வார்டு மக்கள் தன்னார்வமாக இணைந்து உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வார்டில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சொந்த வீட்டு வேலைகளைக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக சப்பாத்தி, புளியோதரை, தக்காளி கொத்து சமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக ஆண்களும் பணிபுரிகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு சென்றுவிட்டு வரும் மாணவ, மாணவிகளும் மாலை, இரவு நேரங்களில் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

முதல்கட்டமாக, கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 ஆயிரம் சப்பாத்திகளை தயாரித்து கடலூரில் நெய்வேலியை அடுத்துள்ள நைநார்குப்பம், குறிஞ்சிப்பாடி, பூதம்பாடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வந்துள்ளனர்.

இவர்களை ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வேலையை அந்த வார்டின் உறுப்பினரான எம்.மலர்விழி மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, வாட்ஸ் அப் மூலமாக தங்களுக்கு தெரிந்தவர்களை ஒருங்கிணைத்து நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். உணவு மட்டும் இல்லாது இதுவரை போர்வை, துண்டு, துணிகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அனுப்பியுள்ளனர். ஆலைகளில் சிப்ட் அடிப்படையில் வேலைக்கு வருவதைப் போல் ஒருவர் சென்றுவிட்டாலும் அடுத்தடுத்து வேலைகளுக்கு பெண்கள் வந்து பங்களித்து வருகின்றனர்.

மீண்டும் 10 ஆயிரம் சப்பாத்திகளை இன்று (நேற்று) அனுப்புவதற்கு மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இதுவரையிலும் ஆயிரம் கிலோ கோதுமை மாவை பயன்படுத்தியுள்ளனர். 300 கிலோ அரிசியை பயன்படுத்தி உணவு சமைத்துள்ளனர்.

இவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை பார்த்து, உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி பிற பகுதி மக்களும் ஆதரவளித்து வருகின்றனர். இதுவரையிலும் இவர்களால் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கையாளப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தகட்டமாக சமைப்பதற்கு தேவையான உணவு பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து பணிகளை மேற்பார்வை செய்வதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து கொடுத்து வரும் அந்த பகுதியைச் சேர்ந்த பி.நாகராஜன் கூறும்போது, ‘நிவாரணப் பொருட்களை சேகரிப்பதை விட அங்கு சென்று கொடுப்பதில்தான் அதிக சிக்கல்களை எதிர்கொண்டோம். கடலூரில் வெளிப்புறமாக உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் எங்களது வாகனங்களுக்கு முன்னால் படுத்து அனைத்து பொருட்களையும் தங்களுக்கே தர வேண்டும் என நிர்பந்தித்த நிகழ்வுகள் பல நடந்தன. இருப்பினும், நிவாரணப் பொருட்கள் சென்று சேராத இடங் களுக்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களுடன் பொருட்களை சுமந்தும் எடுத்துச் சென்றோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x