

நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் படூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
திரிஷ்யம் 4.0 என்ற திட்டத்தின் கீழ், கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை டிரோன் விமானம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களை பாதுகாக்கும் நோக்கிலும், கரோனா பாதித்தவர்களை கண்காணிக்கவும் வசதியாக ‘செவிலி’ என்ற ரோபோ உருவாக்கப்பட்டு சென்னை, செங்கல்பட்டு அரசுமருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.
தீவிர சிகிச்சை பிரிவில் நீண்டநேரம் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக ஹிட்ஸ் ரொபாட்டிக்ஸ் துறை சார்பில் ‘சுசாலி’ என்ற பெயரில் காற்று சுத்திகரிப்பு கருவிகள் தயாரித்து வழங்கப்பட்டன. சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்துஸ்தான் பல்கலைக்கழகத்துடன் கூட்டாக செயல்பட்டு வரும் ஜெர்மனியில் உள்ள டிரையர் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம், தற்போது இந்தியாவில் நிலவும் பேரிடர் நிலையை அறிந்து ரூ.8.85 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளது. அதில் ஆக்சிமீட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ முகக்கவசங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவை விரைவில் படூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கரோனா தொற்றாளர்களுக்கு பயன் ஏற்படும் வகையில் பிரித்து வழங்கப்படும் என இந்துஸ்தான் பல்கலை. தெரிவித்துள்ளது.