Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

புதுச்சேரி, காரைக்காலில் கிராமங்கள் தோறும் கரோனா தடுப்பூசி முகாம்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் ஒவ்வொரு கிராமமாக தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, கரோனா இல்லாத கிராமங்கள் உருவாக்கும் முயற்சியைதொடங்குவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித் துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா நிவாரணப்பொருட்கள், நிவாரண நிதியை நேற்று பல்வேறு அமைப்பினர் துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினர். இந்நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் கூறியதாவது:

கரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக இயங்கி வருகிறோம்.கரோனா தொற்று எண்ணிக்கை யும், உயிரிழப்பும் ஓரளவு குறைந்துள்ளன. ஒரு உயிர் கூட இழக்கக் கூடாது என தீவிரமாக பணியாற்றுகிறோம்.

புதுச்சேரியில் 2 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் வரை உயர்ந்துள்ளன. கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 ஆக்சிஜன் படுக்கைகள் வரை உள்ளன. ஜிப்மரை விட இதுஅதிகம். அரசு மருத்துவ மனைகளுக்கு நம்பிக்கையோடு வரும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம். ‘உயிர் காற்று’ திட்டத்துக்கு பலரும் உதவி வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்காலில் ஒவ்வொரு கிராமமாக தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, கரோனா இல்லாத கிராமமாக்கும் புது முயற்சியை இன்று முதல் எடுக்கிறோம்.

பிராண வாயு செவிலியர்கள். (ஆக்சிஜன் சிஸ்டர்ஸ்) திட்டத்தை தொடங்கியுள்ளோம். தீவிர கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இவர்கள் கண்காணிப்பார்கள். மருத்துவர்களுக்கும் தொற்றாளர்க ளுக்கும் இது உதவும். அதேபோல் மனநல மேம்பாட்டுக்காக தொலைபேசி இணைப்பை அறிமுகம் செய்துள்ளோம்.

‘பல்ஸ் ஆக்சி மீட்டர் பேங்க்’

காரைக்காலில் ‘பல்ஸ் ஆக்சி மீட்டர் பேங்க்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆக்சிஜன் அளவை காண ‘பல்ஸ் ஆக்சி மீட்டர்’ வாங்க இயலாதோர் இங்கு ஆக்சி மீட்டரை வாங்கி பயன்படுத்தி, குணமான பின் திருப்பித் தரலாம். விரைவில் புதுச்சேரியிலும் இதை தொடங்க இருக்கிறோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் குடும்பங் களுக்கு இழப்பீடு நிதி தருவது பற்றி முதல்வருடன் கலந்து ஆலோசித்துள்ளோம். இதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண்வெளியிட்டிருக்கும் தகவலில்,“18 முதல் 44 வயது உள்ளவர் களுக்கான இலவச தடுப்பூசி முகாம்கள் இணையவழி முன்பதிவு மூலம் நடந்து வருகின்றன. இதற்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி, கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மார்பக மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாக முருங்கப்பாக்கத்தில் உள்ள தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு கிராமங்களிலும் மக்களுக்கு இலவச தடுப்பூசி கிடைப்பதற்கான மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கரோனா கால நெருக்கடியில், சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநரகம் மற்றும் சமூக பணித்துறை, புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘பகிர்வோமா’ என்ற தொலை-ஆலோசனையை தொடங்கியிருக்கிறது. மனநல ஆலோசனைகளுக்கு 0413-2262547 எண்ணை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் அழைத்து பயன்பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x