Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்க ‘பாலம்’ வாட்ஸ்அப் குழு தொடக்கம்: ஒரே நாளில் ஏராளமான புகார்களுக்கு காவல் துறை தீர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவைத் தடுப்பதற்காக காவல் துறை சார்பில் ‘பாலம்’ எனும் வாட்ஸ்அப் குழு நேற்று முன்தினம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார், செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட பாலம் எனும் வாட்ஸ்அப் குழு நேற்று முன்தினம் உருவாக்கப்பட்டது. குழு தொடங்கப்பட்ட, சிறிது நேரத்திலேயே ‘ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையை மறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பால் ஆம்புலன்ஸ்கள் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது’ என ஒருவர் புகார் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்கள் செல்வதற்கு வழிவிட்டு மாற்றி அமைக்குமாறு எஸ்.பி அறிவுறுத்தியதையடுத்து அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் மாற்றி அமைத்தனர்.

இதேபோன்று, அறந்தாங்கியில் தேவையின்றி சுற்றித்திரிந்தோரை போலீஸார் அப்புறப்படுத்தியது, புதுக்கோட்டை அசோக் நகர் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி நின்ற மக்களை போலீஸார் ஒழுங்குபடுத்தியது போன்றவை குறித்தும், கூட்டமாக சேர்ந்து கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டது, சூதாட்டம் குறித்த புகார்கள் மீது உடனுக்குடன் போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அதே குழுவில் பகிர்ந்தனர்.

இது குறித்து எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் பாலம் எனும் வாட்ஸ்அப் குழு தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கம்.

இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளோர் பொதுமக்களுக்கு பாலமாக செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் தகுதியான ஆலோசனைகளை கூறலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி புகழ்பாடலோ, வீண் விவாதங்களோ தேவையில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x