Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM

கரோனா 3-வது அலையையும் அரசு சமாளிக்கும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உறுதி

தஞ்சாவூர்

கரோனா 2-வது அலையை தடுக்கவும், 3-வது அலை ஏற்பட்டால் அதை சமாளிக்கக் கூடிய அளவுக்கும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியது: கரோனா காலத்தில் தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு, என்னென்ன தேவை என்பதை அறிந்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நேரிடையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கரோனா குறித்து பரவும் வதந்தி களால், தஞ்சாவூர் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அந்த வதந்திகளை நம்பி பிறருக்கும் பரப்ப வேண்டாம். ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு இருந்தால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவை கேட்டுப் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை 30 ஆயிரம் தடுப்பூசிகள் வருகின் றன. அவை முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கண்காணிப்பு மையம் சிறப்பாக செயல்படுகிறது.

கரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை. கரோனா தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும் என்றால், ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கரோனா தொற்று குறைய, ஊரடங்கு மிகப் பெரிய அளவில் கைகொடுக்கும். மே 31-ம் தேதிக்குப் பிறகு அதன் முடிவுகள் தெரியும்.

கரோனா 2-வது அலையை தடுக்கவும், 3-வது அலை ஏற்பட்டால் அதை சமாளிக்கக் கூடிய அளவுக்கும் அரசு செயல்பட்டு வருகிறது. மக்களைப் பாதுகாக்கும் அளவுக்கு முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன.

பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த அதிமுக ஆட்சியில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நிலவும் மருத்து வர்கள், செவிலியர்கள் பற்றாக்குறைக்கு இன்னும் 2 நாட்களில் தீர்வு கிடைத்துவிடும். மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்களை பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, முதல்வரிடம் தெரிவிக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x