Published : 28 May 2021 06:43 AM
Last Updated : 28 May 2021 06:43 AM

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 10 அடி உயர்வு: குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பிரதான அருவியில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் 2-வது நாளாக நேற்று வெள்ளப்பெருக்கு இருந்தது.

யாஸ் புயல் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்களில் பலத்த மழை குறித்து வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களாக அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் பலத்த மழை பெய்தது. நேற்று முன் தினம் இரவுக்குப் பின் மழை நின்றது. பலத்த காற்று வீசியது. நேற்று பகலில் இவ்விரு மாவட்டங்களிலும் மழையின்றி, நல்ல வெயில் அடித்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 41, சேர்வலாறு- 28, மணிமுத்தாறு- 20.04, நம்பி யாறு- 23, கொடுமுடியாறு- 25, அம்பாசமுத்திரம்- 27, சேரன்மகா தேவி- 14.4, ராதாபுரம்- 11, நாங்குநேரி- 23, களக்காடு- 10.6, மூலக்கரைப்பட்டி- 12, பாளையங் கோட்டை- 6, திருநெல்வேலி- 6.4, கடனா- 27, ராமநதி- 10, கருப்பாநதி- 17, குண்டாறு- 29, அடவி நயினார்- 72, ஆய்க்குடி- 24, செங்கோட்டை- 14, தென்காசி- 36.6, சங்கரன்கோவில்- 17, சிவகிரி- 15.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணைப்பகுதியில் கடந்த 1-ம் தேதியிலிருந்து இதுவரை 302 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதுபோல் ராதாபுரம் பகுதியில் 204.40 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 117 மி.மீ, நாங்குநேரியில் 99 மி.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடியும், சேர்வலாறு அணை 16 அடியும், மணிமுத்தாறு அணை 3.90 அடியும், கொடுமுடியாறு அணை 5.25 அடியும் உயர்ந்திருந்தது. கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த கோடை பருவத்தில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தற்போதுதான் பெருமளவுக்கு தண்ணீர் பெருகி யிருப்பதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அணைகள் நீர்மட்டம்

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்ட்டம் நேற்று காலையில் 129.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9,563.88 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 467.25 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 88 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,595 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

சேர்வலாறு- 151.41 அடி (156), வடக்கு பச்சையாறு- 42.49 அடி (50), நம்பியாறு- 12.53 அடி (22.96), கொடுமுடியாறு- 27.25 அடி (52.25), கடனா- 72 அடி (85), ராமாநதி- 60 அடி (84), கருப்பாநதி- 56.43 அடி (72), குண்டாறு- 36.10அடி (36.10), அடவிநயினார்- 80 அடி (132.22).

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்த பலத்த மழையால் குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x