

கரோனா தொற்றால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் கருணை வேலை வழங்குவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாலுதீன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 89 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியா கருவுற்ற நிலையில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றால் முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார், தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
இவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசு முறையாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், செவிலியர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம், தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும். சில முன்களப் பணியாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
இருப்பினும் முன்கள பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் வாரிசு வேலை தொடர்பாக விதிமுறைகளை வகுக்கலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.