

ஏலகிரி வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் 2 மாதங்கள் ஆகியும் இதுவரை யாரையுமே காவல்துறையினர் பிடிக்காதது அவர்களின் மெத்தனப்போக்கை காட்டுவதாக உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் பட்டியலிட்டு பேசினார்.
அப்போது காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சர் படிக்கத் தொடங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் மற்ற துறைகள் எல்லாம் நன்றாகத்தான் வேலை செய்வதாக சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால், காவல்துறை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள என்னுடைய வீட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கில், இதுவரை யாரையும் காவல் துறையினர் பிடிக்கவில்லை. இவ்வளவு ஏன் விசாரணை கூட நடத்தவில்லை.
கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் காவல்துறை மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகள் அரசியலில் உள்ள எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. காவல் துறையினர் இனியாவது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
என் வீட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கில், அட்லீஸ்ட் இவர்கள் தான் கொள்ளை அடிக்க முயற்சி செய்தார்கள் என்று யாரையாவது பிடிச்சு விசாரிக்க காவல் துறையினர் முன்வர வேண்டும்’’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது அங்கிருந்த காவல் துறையினர் பதில் சொல்லத் தெரியாமல் மவுனமாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.