

கரோனா ஹாட் ஸ்பாட் ஆக மாறிய கோவையில், தொற்று பரவல் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அரசுக்கு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் தற்போதைய சூழலில், கரோனா ‘ஹாட்ஸ்பாட்’ ஆக கோவை மாறியுள்ளது. தினமும் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்த சூழலில், நேற்று (மே 26) மற்றும் இன்று (மே 27) தினசரி பாதிப்பில் சென்னையை மிஞ்சி கோவை முதலிடம் பிடித்துள்ளது.
கோவையில் இதுவரை 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 34,487-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வரை 23,840-க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவையைப் பொருத்தவரையில், மாநகராட்சிப் பகுதியில் தான் தொற்று பாதிப்பு அதிகளவில் (56.77 சதவீதம்) உள்ளது. அதற்கடுத்தபடியாக, வட்டாரப் பகுதிகளான சூலூரில் 10.04 சதவீதம், துடியலூரில் 6.12 சதவீதம், மதுக்கரையில் 5.07, தொண்டாமுத்தூரில் 2.75, பொள்ளாச்சி தெற்கில் 1.69, காரமடையில் 3.59 , எஸ்.எஸ்.குளத்தில் 2.38 , ஆனைமலையில் 3.12 , சுல்தான் பேட்டையில் 1.48, பொள்ளாச்சி வடக்கில் 1.13 , கிணத்துக்கடவில் 1.52, அன்னூரில் 1.83, நகராட்சிப் பகுதிகளான பொள்ளாச்சியில் 1.05 , மேட்டுப்பாளையத்தில் 1.20, வால்பாறையில் 0.27 தொற்று பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வணிக வரித்துறை ஆணையர் சித்திக் ஆகியோர் கோவையில் நேற்று முகாமிட்டு ஆட்சியர், மாநகராட்சி ஆணையருடன் ஆலோசித்து, தடுப்புப் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடவடிக்கை தீவிரம்:
சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது,‘‘ சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் சளி, எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. தனியார் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவை 2 அரசு மருத்துவமனைகள், 19 தனியார் ஆய்வகங்கள் மூலமாக பரிசோதிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படுகின்றன. கரோனா பரிசோதனை மேற்கொண்டால் முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் கிடைப்பதில்லை. தாமதமாவதால், பரிசோதனை மேற்கொண்டவர்களில் தொற்று உள்ளவர்கள், தங்களுக்கு தொற்று இருப்பது தெரியாமல் வெளியிடங்களுக்கு சுற்றுவதால் தொற்று பரவுகிறது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுவர்களில் சிலர், அந்த விதிகளை மீறி வெளியே சுற்றுவதாலும் தொற்று பரவுகிறது. தொழிற்சாலைகள், தொழில் கூடங்கள் அதிகளவில் உள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு வந்தவுடன் அவர் விரைவாக பரிசோதனை மேற்கொள்ளாததால், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும், அதன் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று வேகமாக பரவுகிறது.
தேர்தல் காலத்தில் விதிகளை பின்பற்றாமல் கூடிய மக்கள் கூட்டமும் தொற்று அதிகரிக்க காரணமாகும். ஊரடங்கு விதிகளை மீறும் மக்களாலும் தொற்று பரவுகிறது. தொற்று பரவலைத் தடுக்க உதவும் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமும் தொற்று பரவ முக்கிய காரணமாகும். மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.
தடுப்பு நடவடிக்கை தீவிரம்
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் இன்று (மே 27) கூறும்போது,‘‘ மாநகரில் 1,500 பணியாளர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை வீடு வீடாகச் சென்று, காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ளதா எனக் கேட்டு, அறிகுறி இருந்தால் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
தற்போது கூடுதலாக 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மொத்தம் 3 ஆயிரம் பேர், தினமும் மாநகரில் வீடு வீடாகச் சென்று தொற்று அறிகுறி உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர். புறநகரப் பகுதியில் 100 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று தொற்று அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளன.
இயங்கும் அத்தியாவசிய தொழிற்சாலைகளில் கரோனா தடுப்புப் பணிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா, தொற்று பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தினசரி சராசரியாக 14 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரில் 4 ஆயிரம் படுக்கை வசதிகளும், மாவட்டத்தில் 3 ஆயிரம் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 228 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளிலும் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், 12 ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும் தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன,’’ என்றார்.