Last Updated : 27 May, 2021 06:50 PM

 

Published : 27 May 2021 06:50 PM
Last Updated : 27 May 2021 06:50 PM

வெளிப்படைத் தன்மை இல்லாததால் சித்த மருத்துவம் மங்கிப்போய்விட்டது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

ஆம்பூர்

சித்த மருத்துவ சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் சித்த மருத்துவம் மங்கிப்போய்விட்டது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் கரோனா முதல் அலை பரவியபோது அதற்கான மருந்தாகக் கபசுரக் குடிநீரை பயன்படுத்தலாம் என முதன்முதலாகத் திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவு தெரிவித்தது. அதன்படி கரோனா நோயாளிகளுக்குக் கபசுர குடிநீர் வழங்கியபோது அவர்கள் விரைவாக நோய்த் தொற்றில் இருந்து மீண்டனர். இதைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு மட்டும் இன்றி பொதுமக்கள் எல்லோரும் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீரைப் பருகத் தொடங்கினர். அதன்பிறகு, சித்த மருத்துவத்தைப் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர். தற்போது கரோனா 2-வது அலை பெருகி வரும் நிலையிலும் சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று வருவோர்களே அதிகளவில் குணமடைந்து வீடு திரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன்ன. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் திறப்பு விழா இன்று (மே.27) நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சித்த மருத்துவ ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்.வி.விக்ரம்குமார் வரவேற்றார். வேலூர் புற்றுமகரிஷி மருத்துவமனையின் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு கிராம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

’’திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ சிகிச்சையால் ஆயிரக்கணக்கான கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். சித்த மருத்துவத்தில் உயிரிழப்பு இல்லை என்பது பெருமைக்குரியதாகும். திமுக எதிர்க் கட்சியாக இருந்தபோதே கரோனா நோயை விரட்ட சித்த மருத்துவ முறையை அதிகரிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தது.

அதன்படி தற்போது திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் நிறைய இடங்களில் சித்த மருத்துவ முறை பின்பற்றப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 4 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கரோனா நோயாளிகளுக்குப் பிராணவாயு சீராக இருக்க கிராம்பு குடிநீர், நுரையீரல் பாதிப்பைத் தடுக்க கண்டங்கத்திரி மூலிகை சூப் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி யோக ஆசிரியர்கள் மூலம் தினமும் யோகா பயிற்சியும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர்அண்ணா, திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் சித்த மருத்துவத்தைப் பெரிய அளவில் பின்பற்றியவர்கள்.

நானும் கூட சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துள்ளேன். மஞ்சள் காமாலை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றபோது அவர் சில மருந்துகளை எனக்குக் கொடுத்தார். அதுபற்றி விளக்கம் கேட்டபோது அவர் பதில் கூற மறுத்தது மட்டும் அல்லாமல் அது ரகசியம் எனக் கூறிவிட்டார்.

சித்த மருத்துவ முறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் சித்த மருத்துவம் மங்கிப் போய்விட்டது. வேலூரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு சித்த மருத்துவம் குறித்த புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை நான் வீட்டுக்குச் சென்ற உடன் முழுவதுமாகப் படித்தேன். அதில் எந்தத் தகவலும் புரியும்படி கிடைக்கவில்லை. சித்த மருத்துவம் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் தமிழகத்தில் சித்த மருத்துவம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதைப் போக்க சித்த மருத்துவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். நம் பாரம்பரியமிக்க சித்த மருத்துவம் உலகளவில் பரவ வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பமாக உள்ளது’’.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), அண்ணாதுரை (தி.மலை), திருப்பத்தூர் எஸ்பி.டாக்டர்.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), அமலு (குடியாத்தம்), வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x