செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்திற்கு தர கோரிக்கை; ஒருவார காலத்தில் மத்திய அரசு பதில் தரும்: டி.ஆர்.பாலு நம்பிக்கை

மத்திய அமைச்சர்களை சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர் தங்கம் தென்னரசு.
மத்திய அமைச்சர்களை சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர் தங்கம் தென்னரசு.
Updated on
1 min read

செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தினை இயக்குவது தொடர்பாக, மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் தரும் என, டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற திமுக குழுத்தலைவரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், இன்று (மே 27) மத்திய ரயில்வே , தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் மத்திய உரம் மற்றும் ரசாயன துறையின் இணை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆகியோரை டெல்லி உத்யோக் பவனில் சந்தித்தனர்

அப்போது, செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹெச்.எல்.எல் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி நிலையத்தினை தமிழ்நாடு அரசிடம் ஒப்புவித்து விரைவாக தடுப்பூசி உற்பத்தி பணிகளை தொடங்குவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்குப் பின் டி.ஆர்.பாலு, தங்கம் தென்னரசு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.ஆர்.பாலு கூறுகையில், "ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தினை இயக்க தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வர வேண்டும். இதற்காக, தனியாரிடம் மத்திய அரசு டெண்டர் விட்டது. ஆனால், டெண்டர் எடுக்க பலர் ஆர்வம் தெரிவிக்கவில்லை. அந்த டெண்டர் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அதனால் தாமதம் ஆகிறது. முதலீடு செய்வதில் பிரச்சினை இருக்கிறது.

மத்திய அரசு தனியாரிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை முடிவதற்கு ஒரு வார காலம் ஆகலாம். அதன்பின்னர், உற்பத்தி ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்துவதா, அல்லது மத்திய அரசு நடத்துவதா என்பது தெரியவரும். ஆனால், எப்படியோ உற்பத்தி ஆலை இயக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

உலக சுகாதார மையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த சந்திப்பில் இல்லை.

மக்களைக் காப்பாற்ற அதிக தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்பதே முதல்வரின் குறிக்கோள். மத்திய அமைச்சர்களிடம் இந்த சந்திப்பில் நிதியுதவி கேட்கவில்லை. பணம் பிரச்சினையில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை மக்கள்தான் முக்கியம். தடுப்பூசியை விரைவாக கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in