

ஊரடங்கு காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைதார்கள், இலைகள் விற்பனை ஆகாததால், விவசாயிகள் வாழை தோட்டத்தை டிராக்டர் மூலம் உரமாக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் மரத்திலேயே வாழை பழங்கள் அழுகி மரங்கள் விழுந்து கிடக்கின்றன. பிரச்சினையை அரசு சரி செய்யும் கோரிக்கையை இரண்டாம் ஆண்டாக விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
புதுச்சேரியில் திருக்கனுார், சந்தை புதுக்குப்பம்,சோரப்பட்டு,வில்லியனூர்,பாகூர், சுத்துக்கணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு, பயிரிட்டு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்வர். குறிப்பாக வாழை மட்டும் 600 ஏக்கரில் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பகுதி நேர ஊரடங்கு உள்ளது. புதுச்சேரி விளைபொருட்கள் பெரும்பாலானவை தமிழகத்தை நம்பியே உருவாக்கப்படுகின்றன.
இதனால் பூ வியாபாரிகள் தங்கள் பூக்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் செடியை காப்பாற்ற பறித்து கொட்டும் அவலம் நிலவுகிறது. இதுபோன்ற சூழல் வாழைக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது கிராமப்புறங்களில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழைக்காய், வாழைத்தார்கள் மற்றும் இலைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
ஆனால், போக்குவரத்து தடையில் தமிழக வியாபாரிகள் யாரும் தோட்டத்திற்கு வராததால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாழை தோட்டம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குச்சிப்பாளையம் உட்பட பல பகுதிகளில் மரத்திலேயே பழங்கள் உள்ளிட்டவை அழுகிபோயுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்து விட்டன.
இதுபற்றி குச்சிப்பாளையம் விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், "மரங்களில் வாழைபழங்கள் அழுகி போய்விட்டன. ஆட்களை அழைத்து வந்து கூலி தந்து, சந்தைக்கு கொண்டு செல்ல வழியில்லை. பலமரங்களும் விழுந்து விட்டன" என்றார்.
சில இடங்களிலோ பழம், இலை வியாபாரத்துக்கு கொண்டு வந்தாலும் நஷ்டம்தான் அடைய வேண்டிய சூழல் இருப்பதாக குறிப்பிடுகின்றன.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மேலும் நஷ்டத்தை அடைய மனமின்றி, பல ஏக்கர் பரப்பில் பயிரிட்ட வாழை தோட்டங்களை டிராக்டர் இயந்திரம் மூலம் அழித்து, நிலத்திலேயே உரமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் நஷ்டத்தை குறைக்கும் விதத்தில் சந்தைப்புதுக்குப்பத்தில் விவசாயி சுந்தரமூர்த்தியின் நிலத்தில் மரங்கள் டிராக்டர் மூலம் இன்று உரமாக்கப்பட்டன.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "எல்லைகள் மூடல், பொது போக்குவரத்து இல்லாதது, புதுச்சேரியிலும், தமிழகப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. இம்முறையாவது அரசு எங்களுக்கு உதவ வேண்டும். மாற்று பயிர் செய்ய மானியம் தரவேண்டும். " என்று கோருகின்றனர்.
பூ விவசாயிகள், வாழை விவசாயிகள் என பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் இப்பிரச்சினையை சரி செய்யுமா புதுச்சேரி அரசு?