Published : 27 May 2021 04:41 PM
Last Updated : 27 May 2021 04:41 PM

சென்னையில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப் பணி இயக்கம் தொடக்கம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் நீண்ட நாட்கள் தேங்கக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற தீவிர தூய்மைப் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தூய்மை பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் தற்பொழுது மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர், வார்டு-123ல் பல்லக்கு மனியம் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் அகற்றும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தொடங்கிவைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரைக்குட்பட்ட பகுதிகள், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், காலி இடங்களில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாட்டு கழிவுகளை தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் மூலம் அகற்றி சென்னை மாநகரை தூய்மையாக்கும் பணி இன்று (27.05.2021) தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

இப்பணிகள் மண்டலம் 1 முதல் 3 வரை M/s. Chennai Enviro Solutions Private Limited மூலமாகவும், மண்டலம் 4 முதல் 8 வரை பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாகவும், மண்டலம் 9 முதல் 15 வரை உர்பேசர் மற்றும் சுமித் பெசிலிடிஸ் லிமிடெட் மூலமாகவும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த தூய்மைப்பணி திட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 1300 துப்புரவு பணியாளர்களும், 500 சாலைப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 37 எண்ணிக்கையில் காம்பேக்டர் வாகனங்களும், 75 எண்ணிக்கையில் டிப்பர் லாரிகளும், 60 எண்ணிக்கையில் ஜேசிபி மற்றும் பாப்காட் இயந்திரங்களும், 180 எண்ணிக்கையில் பாட்டரி வாகனங்களும், 65 எண்ணிக்கையில் மூன்று சக்கர வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ள தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் நாள்தோறும் சுமார் 500 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் அடுத்த 10 நாட்களில் சுமார் 1500 மெட்ரிக் டன் குப்பைகளும் சுமார் 5000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டு கழிவுகளும் அகற்றப்பட உள்ளது.

மேற்கண்ட துப்புரவு பணிகளை தீவிரமாக மேற்கொள்வதன் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் தூய்மையாக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும். நாள்தோறும் நடைபெறும் துய்மை பணிகள் இணை மற்றும் துணை ஆணையாளர்கள், தலைமை பொறியாளர் மற்றும் சம்மந்தப்பட்ட மண்டல அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, அதுகுறித்த விவர அறிக்கையினை தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, மத்திய வட்டார இணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதர், துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஷ், (சுகாதாரம்), மேகநாத ரெட்டி, (பணிகள்), விஷூ மகாஜன் (வருவாய் (ம) நிதி) தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு) மகேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x