

வேலூரில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவருக்குக் கருப்புப் பூஞ்சை பாதிப்பால் ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார்.
வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மீண்டும் சிஎம்சி மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்தபோது கருப்புப் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.
அவரது இடது கண் பகுதியில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண் அகற்றப்பட்டது.
அவர் நேற்று (மே 26) இரவு திடீரென உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் நபர் இவர் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 71 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. இவர்களில் 13 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள்.
இதுகுறித்துச் சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிஎம்சி மருத்துவமனையில் 70-க்கும் அதிகமானவர்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வேலூரைச் சேர்ந்த நபர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை சிஎம்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.