

மார்ச் மாதம் முதல் அமேசான் காடழிப்பு மோசமடைந்து இருப்பதாக பிரேசில் துணை அதிபர் ஹமில்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹமில்டன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ மார்ச் மாதம் முதல் அமேசான் பகுதிகளில் காடழிப்பு அதிக அளவில் நடந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் காடழிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ” என்றார்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார், முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை பிரேசில் அதிபர் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .
40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.