துவரம்பருப்பு, பாம் ஆயில் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை: நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு மனு

துவரம்பருப்பு, பாம் ஆயில் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை: நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு மனு
Updated on
1 min read

பொது விநியோகத் திட்டத்திற்காக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத்தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், “2021 ஏப்ரல் 26-ஆம் தேதி 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5 ஆம் தேதி 80 லட்சம் லிட்டர் பாமாயில் சமையல் எண்ணெய்க்கான டெண்டர் அறிவிப்பும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய நிபந்தனைகள் படி, டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் (Turnover) கொண்டிருந்தால் மட்டுமே டெண்டரில் பங்கேற்க அனுமதி, ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் (Turnover) செய்திருந்தால் போதும் எனக் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த மதுரைக் கிளை நீதிபதி வி.எம்.வேலுமணி, தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசுத்தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மதுரைக் கிளையை தான் அணுக வேண்டும் எனத் தெரிவித்தனர். அதற்கு அரசுத்தரப்பில் கரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டியுள்ளதாகவும், இடைக்காலத் தடை விதித்த நீதிபதி தலைமையில் தான் இரு நீதிபதிகள் அமர்வும் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர். இன்று மதியம் அல்லது நாளை இந்த மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in