

தமிழகத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கை நீட்டிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பெருகி வந்த கரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் போனது. இதையது ஊரடங்கில் தளர்வுகள் ரத்து செய்யப்பட்டது, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து நாளொன்றுக்கு 35000 ஐ தொற்று எண்ணிக்கை கடந்தது. சென்னையில் 6000 க்குமேல் தொற்று எண்ணிக்கை தினசரி பதிவானது.
இதையடுத்து முழு ஊரடங்கு அமலானது, அதிலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதால் மே 24 முதல் முழு தளர்வுகளற்ற ஊரடங்கு அமலானது, இதனால் தொற்று எண்ணிக்கை தற்போது வேகமாக குறைந்து வருகிறது. ஆனால் பல மாவட்டங்களில் அது குறையவில்லை. ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த ஒரு வாரத்திற்கு எந்தத் தளர்வும் இல்லாமல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை செய்தபோது, முதலில் ஒருவார காலம் ஊரடங்கைப் போடுவோம்.
தேவைப்பட்டால் இரண்டாவது வாரமும் அதை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இப்போதுள்ள நிலை ஓரளவுக்கு திருப்தியாக இருக்கிறது. இன்னும் முழு திருப்தி வரவில்லை. வந்த பிறகு அதை குறித்து யோசித்து முடிவு எடுப்போம்”.எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் ஊரடங்கின் நிலை, மாவட்டங்களில் ஊரடங்கு அமலவாது, சட்டம் ஒழுங்கு, நோய்த்தொற்றுப்பரவல், தடுப்பூசி, ஊரடங்கை நீட்டிப்பதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஊரடங்கு வரும் மே 31- ம் தேதியுடன் முடிவடைகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமாக குறைந்தாலும் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவல் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு சில ஆலோசனைகள் வைக்கப்பட்டதாகவும், அதனால் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்குப்பின் ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிகிறது.