கோயில்கள் சார்பாக ஒரு லட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கும் திட்டம்; பற்றாக்குறை நிதியை அன்னதானத்திட்ட மைய நிதியிலிருந்து வழங்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

அமைச்சர் சேகர்பாபு: கோப்புப்படம்
அமைச்சர் சேகர்பாபு: கோப்புப்படம்
Updated on
1 min read

கோயில்கள் சார்பாக ஒரு லட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும் திட்டத்திற்குத் தேவையான பற்றாக்குறை நிதியை அன்னதானத்திட்ட மைய நிதியிலிருந்து வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோயினால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில், அவர்களது பசியினைப் போக்கும் விதமாக, திருக்கோயில்களில் இருந்து உணவுப்பொட்டலங்களை உணவு தேவைப்படுவோருக்கு வழங்கிடுமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் ஏற்கெனவே ஆணையிடப்பட்டது.

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, திருக்கோயில்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு உணவுப்பொட்டலங்களாக நாள்தோறும் ஏழை எளியோருக்கு 12.05.2021 அன்று முதல் வழங்கப்பட்டு பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் திட்டமாக வரவேற்பைப்பெற்றுள்ளது.

ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 05.06.2021 வரை உணவுப்பொட்டலங்களை வழங்கிட திருக்கோயில் நிர்வாகங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இச்சேவையினை தொடரும் நிலையில், 349 திருக்கோயில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், திருக்கோயில்களுக்கு இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தினை கணக்கிட்டதில் ரூ.2 கோடியே 51 லட்சத்து 7,647 தேவைப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றுக்காலத்தில் உணவு தேவைப்படுவோருக்கு திருக்கோயில்கள் வாயிலாக உணவுப்பொட்டலங்களைத் தொடர்ந்து வழங்கிடத் தேவைப்படும் நிதியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து திருக்கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in