Published : 27 May 2021 11:52 AM
Last Updated : 27 May 2021 11:52 AM

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு: மேற்குவங்கம் புறப்பட்ட தனியார் கொசுவலை ஊழியர்கள்

ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பதால் கரூரில் உள்ள தனியார் கொசுவலை ஊழியர்கள் பேருந்து மூலம் மேற்குவங்கம் புறப்பட்டனர்.

கரூரில் உள்ள சாயப்பட்டறைகள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கின்போது அரசே சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வடமாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. இம்முறை ஊரடங்கு கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில் தொழிற்சாலைகள் செயல்படத் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் கடந்த 19ம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரசு கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்தமாக வாகனங்களை ஏற்பாடு செய்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். கடந்த 24ம் தேதி தனியார் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் 27 பேர் தங்கள் குடும்பங்களுடன் தனியார் ஆம்னி பேருந்து மூலம் மேற்குவங்கம் புறப்பட்டுச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து கரூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கொசுவலை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 40 பேர் குடும்பத்துடன் இன்று (மே 27ம் தேதி) தனியார் பேருந்து மூலம் மேற்குவங்கம் புறப்பட்டனர். அப்போது தாங்கள் பயன்படுத்திய ஏர்கூலர், சிறுவர் சைக்கிள், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டனர்.

ஊரடங்கு மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்பதால் ஊருக்குத் திரும்புவதாகவும் 40 பேர் மேற்குவங்கம் செல்ல ரூ.2 லட்சம் செலவாகும் என்றும் தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x