

தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.இதையொட்டி, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீஸார் கண்காணித்து வருகின்றனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பால் விநியோகம் மட்டும் தடையின்றி நடந்து வருகிறது.
அவசரத் தேவைகளுக்காக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், இ-பதிவு செய்த வாகன ஓட்டிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப, ரூ.600 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, நீதிமன்றங்கள் மூலமே திரும்பப் பெற முடியும்.
மேலும், பலர் போலி ஆவணங்களைக் கொண்டு இ-பதிவு செய்து பயணிக்கின்றனர். அவர்களையும் போலீஸார் கண்டுபிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 35 பேர் போலி இ-பதிவு ஆவணங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போலி இ-பதிவு ஆவணங்கள் வைத்திருந்ததாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, கடந்த 46 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 11 லட்சத்து 33 ஆயிரத்து 828 வழக்குகளும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது 52 ஆயிரத்து 286 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.