

தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த வரும் ஜூன் 15-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 31-ம்தேதி வரை தளர்வுகளற்ற முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில்கொண்டு, சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் இம்மாதம் 10-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையை வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத, உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக் கட்டணத்துடன் செலுத்தவும்காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் வரும் ஜூன் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
எனவே, பயனீட்டாளர்கள் இன்டர்நெட் பேங்கிங், செல்போன், டெபிட், கிரெடிட் கார்டு, பிபிபிஎஸ் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தி, மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாக வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.